தனியார் பள்ளி விடுதியில் பாம்பு கடித்து 9ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர், நல்லபாம்பு கடித்து உயிரிழந்தார்.

திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள அவர்(Our) லேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படிக்கின்றனர்.

இதில் கொடைக்கானல் வெறியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவரது மகள் வர்ஷா, விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று இரவு விடுதி வளாகத்திலுள்ள கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பிய மாணவி, தன்னை ஏதோ ஒரு பூச்சி கடித்துவிட்டதாக சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளவே, மாணவியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த, போலீஸார் விடுதிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு நல்லபாம்பு ஒன்று பதுங்கியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மாணவியை கடித்தது நல்லபாம்பு என்பதை உறுதிப்படுத்திய போலீஸார், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையிலேயே வைத்தனர்.

பாம்பு கடித்து சக மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மற்ற மாணவிகளிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே