ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கான #கீழடி_தமிழர்_நாகரிகம்

தமிழரின் ஆதிவரலாற்றை வெளிக்கொண்டு வந்த கீழடி அகழாய்வுகள் தொடர்பான ஹேஷ்டேக்குகள் #கீழடி_தமிழர்_நாகரிகம் என்ற பெயரில் இந்திய அளவில் டிரெண்டிங்காகி முதலிடம் பிடித்துள்ளது.

சிந்துசமவெளி ஆய்வு முடிவுகளின் படி தமிழர்களே இந்திய நிலப்பரப்பின் பூர்வ குடிகள் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதுதான் வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்பட்டு வரும் திராவிடர் நாகரிகம் என்பதற்கான எண்ணற்ற சான்றுகள் நிறுவப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானையும் தாண்டி ஈரான், எகிப்து முதல் கடல் கொண்ட குமரிக் கண்டம் வரைக்குமான பெருநிலப்பரப்பு எங்கும் வாழ்ந்த ஆதிமனிதர்கள் தமிழர்களே என்பது சிந்துசமவெளி ஆய்வாளர்களின் கருத்து.

சிந்துசமவெளியை ஒட்டிய குஜராத்தின் தோலவீரவில் இன்றும் அதன் சான்றுகள் இருக்கின்றன.

குஜராத்தை அடுத்த மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா என மலைப்பிரதேசங்களில் இன்றும் திராவிடர் பழங்குடிகளே வாழ்கின்றனர். அவர்கள் பேசுவது திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழியான தமிழே.

சிந்துசமவெளியை ஒட்டி குஜராத்தின் கட்சி பிராந்தியமானது ஆதி தமிழர்களான நாகர்களின் தேசம் என்றே இன்றும் குஜராத்திகளே வரலாற்றை எழுதி வைத்திருக்கின்றனர். ஆதி தமிழர்கள் இப்படி இந்திய பெருநிலப்பரப்பு எங்கும் வாழ்ந்தனர்.

அரசியல் சாசனத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கரும், வடபுலத்து நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழை கைவிட்டு சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டனர். தென்புலத்து நாகர்கள் தாய்மொழியான தமிழை அப்படியே தக்க வைத்துக் கொண்டனர் என்கிறார்.

தற்போது மதுரைக்கு அருகே கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு முடிவுகள் கவிஞர் வைரமுத்து கூறுவதைப் போல, சிந்துவெளிக்கு முந்துவெளி எங்கள் கீழடி என்பதாக பறைசாற்றி நிற்கிறது.

6,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கல்வியில் சிறந்தவர்களாக, வாழ்வியல் கட்டமைப்பு முறைகளில் உயர்வான நாகரிகத்துடன் வாழ்ந்தவர்கள் என்பதை கீழடி முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

சிந்துசமவெளியில் கிடைத்த சான்றுகளின் தொடர்ச்சியாக அப்படியே வைகை சமவெளியிலும் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இதனால்தான் தமிழர்கள் இந்திய பெருநிலப்பரப்புக்கு சொந்தக்காரர்கள் என்கிற பெருமிதம் கொள்கின்றனர்.

தற்போது தமிழர்கள் சமூக வலைதளங்களில் கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

#கீழடி_தமிழர்_நாகரிகம் என்கிற ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் வகிக்கிறது.

இந்த பக்கத்தில் கீழடியின் அகழாய்வுகளை முன்வைத்து ஏராளமான பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே