சுபஸ்ரீயின் உயிரைக் காவு வாங்கிய பேனருக்கு லஞ்சம்

சுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமான பேனரை வைப்பதற்கு, மாநகராட்சி ஊழியர்களுக்கு ஜெயகோபால் தலா 1,000 ரூபாய் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை பள்ளிகரணை மேம்பாலம் அருகே கடந்த 12ஆம் தேதி வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்தது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது லாரி ஏறியதில் அவர் உயிரிழந்தார். அனுமதியின்றி பேனரை வைத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளிக்கரணை காவல் உதவி ஆய்வாளரான பாஸ்கர், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஜய் என்பவருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், பேனர் வைப்பதற்காக, மாநகராட்சி ஊழியர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினேன் என ஜெயகோபால் தன்னிடம் தெரிவித்ததாக பாஸ்கர் கூறுவது பதிவாகியுள்ளது.

விபத்து நடப்பதற்கு முதல் நாள் பேனர் வைக்கும்போதே அங்கு பிரச்சனை ஏற்பட்டதாகவும், தங்களை ஜெயகோபால் மிரட்டியதாகவும் ஒப்பந்த ஊழியர் கூறுவது பதிவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே