சென்னையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை கடத்தல் நாடகம் ஆடி பறித்துக் கொண்டு, காதலனுடன் கனடா ஓடிச்செல்ல திட்டமிட்ட அப்பல்லோ மருத்துவமனையின் செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் கடத்தல் திட்டம் வகுத்து சென்னையில் சிக்கிய மென் பொறியாளரின் காஸ்ட்லி காதல் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி…

கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் வித்யா. இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த வியாழக்கிழமை மாலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தனது சகோதரருக்கு இண்டர்நெட் காலில் தொடர்பு கொண்ட வித்யா, மர்மநபர் ஒருவர் தன்னை கடத்திவிட்டதாக கூறி செல்போன் இணைப்பை துண்டித்தார். இதன் பின்பு வித்யாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

5 மணி நேரம் கழித்து வித்யாவின் தந்தை ஆறுமுகத்துக்கு இண்டர்னெட் கால் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், 10 லட்சம் ரூபாய் பணத்தை தான் சொல்லும் இடத்திற்கு வந்து கொடுக்கவில்லை என்றால் வித்யாவை துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவதாக மிகக்கொடூரமாக மிரட்டி உள்ளார்.

இதனால் பதறிபோன வித்யாவின் தந்தை தனது உறவினர்களுடன் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு வந்து இங்குள்ள காவல் நிலையத்தில் தனது மகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து உடனடியாக 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது வித்யா, சாதாரன செல்போன் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

கையில் சாதாரண போன் மட்டுமே உள்ள நிலையில் வித்யா எப்படி இண்டர்னெட் காலில் பேசினார் என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

அவரது செல்போன் நம்பரை பெற்று அவர் யார் யாருடன் பேசி உள்ளார் என்ற விவரத்தை சேகரித்தனர். அவர் சென்னை விமான நிலையம் அருகே ஒரு செல்போன் நம்பருக்கு பேசி இருப்பது தெரியவந்தது. அந்த குறிப்பிட்ட செல்போன் எண் அங்கிருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு சென்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தப்பட்ட வித்யா காரைக்காலில் உள்ள கல்லூரி ஒன்றில் தான் பி.எஸ்.சி நர்சிங் படித்தது தெரியவந்ததையடுத்து, அங்கு சென்று விசாரித்த போது வித்யாவிற்கு அக்ஷ்யா என்ற நெருக்கமான தோழி இருப்பதை கண்டறிந்தனர்.

அவரிடம் விசாரித்த போது வித்யா கல்லூரியில் படித்த போது என்ஜினீயரிங் மாணவரான மனோஜ் என்பவரை காதலித்ததாகவும், அவர்கள் இருவரும் தற்போது வரை காதலித்து வருவதாகவும் மலேசியாவில் பணிபுரிந்துவந்த மனோஜ் வியாழக்கிழமை மாலை தான் அங்கிருந்து சென்னை வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அக்ஷ்யா மூலம் மனோஜின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்த போது, தான் வித்யாவை கடத்தவில்லை என்றும் தான் மலேசியாவில் கணினித்துறை பொறியாளராக பொறுப்பான பணியில் இருப்பதாகவும் தெரிவித்த மனோஜ், தற்போது கடலூரில் இருப்பதாகவும் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வேண்டுமானால் நேரடியாக வருவதாக தெரிவித்தார்.

காரைக்காலில் இருந்த தனிப்படை போலீசார் முதலில் அவரை கடலூர் காவல் நிலையத்துக்கு வரவைத்து, அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். வித்யாவுடன் தனக்கு தொடர்பில்லை என்று மறுத்தார் மனோஜ்.

பின்னர் மனோஜுக்கு நடந்த சிறப்பு கவனிப்பில் வித்யா கடத்தல் நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது.

வித்யாவும், மனோஜும் 3 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருவதாக கூறப்படுகின்றது. இருவருமே நல்ல வேலையில் இருந்தாலும் வேறு வேறு சாதி என்பதால் இவர்களின் காதலுக்கு வித்யாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து மலேசியாவில் உள்ள மனோஜை தொடர்பு கொண்டு, வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டால் பிரித்துவிடுவார்கள் என்றும் நாட்டைவிட்டே ஓடிச்சென்று கலப்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று காஸ்ட்லியாக யோசனை தெரிவித்துள்ளார் வித்யா..!

கனடாவுக்கு செல்ல அதிக பணம் தேவைப்படும் என்பதால் நிலத்தை விற்று 14 லட்சம் ரூபாயை கையில் வைத்திருக்கும் தனது தந்தையிடம், தன்னை கடத்தி விட்டதாக கூறி பணம் கேட்டு மிரட்டும்படி திட்டம் வகுத்து கொடுத்துள்ளார் வித்யா..!

கவுதம் மேனன் படங்களை அதிகமாக பார்க்கும் மனோஜ், காக்க காக்க படத்தின் வில்லன் ஸ்டைலில் கடுமையாக போனில் மிரட்ட வித்யாவின் தந்தை மிரண்டு போயுள்ளார். காவல்துறையினரும் கடத்தல் கும்பலை சுட்டுப்பிடிக்கும் முயற்சியுடன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக போலீஸ் தன்னை சந்தேகிப்பதை அறிந்ததும் மனோஜ் தனது காதலியை கடலூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டு நல்லபிள்ளை போல போலீஸ் விசாரணைக்கு வந்ததால் துப்பாக்கிக்கு வேலையில்லமல் போய்விட்டது என்கின்றனர் தனிப்படையினர்.

இதையடுத்து கடத்தல் நாடகமாடிய காஸ்ட்லி காதல் ஜோடியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொதுவாக காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள், ஆனால் இவர்களது காதல் ஜெயிலில் களி தின்ன வைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே