காபூலில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ராக்கெட் தாக்குதல்

இரட்டை கோபுர தாக்குதல் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

2001ஆம் ஆண்டு இதே நாளில், பயணிகளுடன் விமானங்களைக் கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள், நியுயார்க்கில் இருந்த தலா 110 மாடிகளைக் கொண்ட உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது 2 விமானங்களை மோதச் செய்தனர்.

இந்த தாக்குதலில் சுமார் 3000 அப்பாவிகள் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய கொடூரத் தாக்குதலின் 18ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் செவ்வாய் கிழமை இரவு ராக்கெட் தாக்குதல் நடத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளாகத்தில் தாக்குதல் நடைபெற்றதற்கான எச்சரிக்கை ஒலி ஒலித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று நேட்டோ கூட்டுப் படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்ததை அடுத்து காபூலில் நடந்த முதல் பெரிய தாக்குதலாக இது அறியப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே