இந்தியா 202 ரன்கள் சேர்ப்பு – ரோஹித் அபார சதம்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 202 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடி டெஸ்ட் அரங்கில் 4ஆவது சதத்தை பதிவு செய்தார்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.

டெஸ்ட் போட்டியில் நீண்ட நாள்களுக்கு பிறகு விளையாடிய ரோஹித் ஷர்மா, தனக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு மயங்க் அகர்வாலும் உறுதுணையாக இருந்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.

சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா, 154 பந்துகளை எதிர்கொண்டு, சதத்தை பதிவு செய்தார். இது டெஸ்ட் அரங்கில் அவரது 4ஆவது சதமாகும்.

மறுமுனையில் மயங்க் அகர்வாலும் அரை சதத்தை கடந்தார்.

2 பேரின் விக்கெட்டுகளையும் கைப்பற்ற தென்னாப்பிரிக்க பவுலர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் 59ஆவது ஓவரின்போது மழை குறுக்கிட்டது.

இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்களை எடுத்திருந்தது.

ரோஹித் ஷர்மா 115 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மழை தொடர்ந்து பெய்ததால் முதல்நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. நாளை மீண்டும் போட்டி தொடங்கி நடைபெறுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே