அந்தரங்கம் : ஆண்கள் சந்திக்கும் தலையாய பிரச்சனை..!!

ஒரு ஆண் தாம்பத்ய வாழ்வுக்கு தகுதியானவராக இருக்கிறார் என்பதற்கான முதல் அறிகுறி விரைப்புத்தன்மை ஆகும். பெண்கள் குறித்த சிந்தனை மனதில் ஓடும்போது, தனக்கான கனவு நாயகியை நினைக்கும்போது, தன்னுடைய மனைவியுடன் இணை சேர தயாராகும்போது ஆணுறுப்பு விரைப்புத்தன்மை அடைய வேண்டும். அது மட்டுமல்லாமல் பாலியல் உறவை முடிக்கும் வரையிலும் இந்த விரைப்புத்தன்மை நீடிக்க வேண்டும்.

ஆனால், துரதிருஷ்டவசமாக சில ஆண்களுக்கு விரைப்புத்தன்மை ஏற்படுவதில்லை அல்லது நீடித்து நிற்பதில்லை. ஒரு ஆணுக்கு எந்த வயதிலும் இந்த பிரச்சினை ஏற்படலாம். இதன் காரணமாக பாலியல் நாட்டமின்மை, உச்சகட்டம் அடைவதில் சிக்கல், விந்தணு வெளியேற்றுவதில் சிக்கல் போன்றவை ஏற்படலாம்.

மனதளவில் ஆண்களுக்கு இது மிகுந்த வெறுப்புணர்வை உண்டாக்கும். அதே சமயம், தன்னை சுற்றியுள்ள நண்பர்கள் அல்லது உறவுகளிடத்தில் இதுகுறித்து விவாதித்தால், எங்கே தன்னை இகழ்ச்சியாக கருதுவார்களோ என்று எண்ணி பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். சமூக ரீதியான தயக்கம் காரணமாக மனதுக்குள் இதை பூட்டி வைக்கும்போது தன்னம்பிக்கை உடையும் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்றவை உண்டாகும்.

நாளடைவில் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படலாம். ஆனால், விரைப்புத்தன்மை குறைபாடு என்பது நோய் கிடையாது. ஆணுறுப்புக்கு ரத்த ஓட்டம் மிகுதியாக செல்வதில் ஏற்படும் சிக்கல் தான் இதற்கு காரணமாகும்.

எனினும், இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்து தீர்வு பெறலாம். அதே சமயம், நம் வாழ்வியல் நடவடிக்கைகளை கொஞ்சம் மாற்றம் செய்தாலே இதற்கு தீர்வு கிடைக்கும்.

உடலும், மனதும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி மிக முக்கியமானதாகும். வாரத்தில் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு தலா 40 நிமிடங்கள் வரை மிதமான பயிற்சிகளை செய்ய வேண்டும். நீச்சல் அடிக்கலாம், விறுவிறுவென நடக்கலாம், சைக்கிள் ஓட்டலாம் மற்றும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவுகளை சீரான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் விரைப்புத்தன்மை குறைபாடு பிரச்சினைக்கு தீர்வு பெறலாம். சில காய்கறிகள், பழங்கள், பருப்புகள், நட்ஸ், கொழுப்பு நிறைந்த மீன்கள் போன்றவை பயன் அளிக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடலின் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இதனால் விரைப்புத்தன்மை குறைபாடு தவிர்க்கப்படும்.

உடல் பருமன் மற்றும் மிகுதியான உடல் எடை காரணமாக விரைப்புத்தன்மை குறைபாடு ஏற்படலாம். உடலில் கெட்ட கொழுப்புகள் மிகுதியாக இருந்தாலும் இந்தப் பிரச்சினை ஏற்படும். ஏனெனில், விரைப்புத்தன்மையை தூண்டக் கூடிய ஹார்மோன்களின் செயல்பாடுகளை அது தடுக்கும். ஆகவே, ஆரோக்கியமான எடை, உயரத்திற்கு ஏற்ற கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்டிருப்பது அவசியமாகும்.

தூக்கத்திற்கும், பாலியல் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று நினைத்து விடாதீர்கள். போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் டெஸ்டிரோடோன் அளவுகள் குறையும். இதன் எதிரொலியாக விரைப்புத்தன்மை குறைபாடு ஏற்படலாம். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியமாகும்.

மது மற்றும் புகைப்பழக்கம் கொண்ட ஆண்களுக்கும் விரைப்புத்தன்மை குறைபாடு பிரச்சினை ஏற்படலாம். புகைப்பிடிப்பதை முற்றிலுமாக கைவிடுவது மற்றும் மது அளவை குறைத்துக் கொள்வது போன்றவை மூலமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே