அக்டோபர் 18ஆம் தேதிக்குள் அயோத்தி வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு

அயோத்தி வழக்கில், அனைத்து தரப்பினரும் தங்களது இறுதி வாதங்களை அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அனைத்து தரப்பினரும் தங்களது இறுதிவாதங்களை அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

விசாரணையை விரைந்து முடிப்பதற்கு தேவைப்பட்டால், நாள்தோறும் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்தியஸ்த திட்டம் தொடர்பான கடிதம் தங்களிடம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், பரஸ்பர பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதிவாதிகள் விரும்பும்பட்சத்தில், அதை உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும் நவம்பர் மாதம் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். இதனால் தான் ஓய்வு பெறுவதற்குள் அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடித்து தீர்ப்பளிக்க அவர் விரும்புவதாக தெரிகிறது.

எனவே, உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இறுதி வாதங்கள் அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும் பட்சத்தில், நவம்பர் முதல் வாரத்திலோ அதற்கு முன்னதாகவே தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே