ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பால்கோவா ருசியாகவும், திகட்டாமலும் இருக்கும்.
பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வந்த பால்கோவா, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியின் குடிசைத் தொழிலாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் பால்கோவா மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பால்அல்வா, பால்பேடா, பால்கேக், கேரட்பால்கோவா மற்றும் பியூர்கோவா என பல வகையில் தயாரிக்கப்படுகிறது.
சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதால் இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. சுமார் 80 ஆண்டுகளாக இப்பகுதியில் தனித்துவத்துடன் தயாரிக்கப்படும் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு ஏதும் இல்லாததால், புவிசார் குறியீடு விரைவில் அளிக்கப்படும் என புவிசார் குறியீடுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தயாரிக்கக் கூடிய 31 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் 32 ஆவது பொருளாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது.
இதன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்ற வார்த்தையை வேறு பகுதிகளை சேர்ந்த யாரும் கூறி விற்பனை செய்ய முடியாது என்பதுடன், சர்வதேச அளவில் தனி அங்கீகாரம் கிடைக்கும்.