வெள்ளத்தில் தத்தளிக்கும் பாட்னா..

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மழைநீர் தேங்கி பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சாலைகளில் மார்பளவுக்கு வெள்ளம் செல்வதால் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழையால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களிலும் சாலை போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இன்றி தவிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலுள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணிகளில் 32 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் சில குழுவினர் பாட்னா வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடுகள் மட்டுமின்றி மருத்துவமனைகள், ரயில் நிலையங்களிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. புகழ்பெற்ற நாலந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

பாட்னாவில் அமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான அஜய் அலோக்கின் வீட்டினுள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.

இதனிடையே மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகல்பூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதே போல் காகல் பகுதியில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில், ஆட்டோவில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 13 பேர் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வெள்ளபாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே பாட்னா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் பாட்னாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே