விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

சிறு,குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஊழலுக்கு எதிராக அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்றும் மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் இப்போது உரிய இடங்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த மாநில புதிய தலைமை செயலகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் சிறு,குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையும், சிறு,குறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

விழா மேடையில் அவர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு, திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை வழங்கினார். இதே போன்று பழங்குடியினத்தவர்களுக்கான நாடு முழுக்க 462 ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகள் அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் சட்டப்பேரவை கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது என்றார். 

இதற்கு முன்பு இல்லாத வகையில் நாடு பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறிய அவர், இது வரை பார்த்துள்ளது டிரைலர் தான், இனிமேல் தான் முழு திரைப்படமும் வர உள்ளது என்றார்.

இன்னும் நல்ல பல திட்டங்கள் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட உள்ளதை குறிப்பிட்டார். ஊழலுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் இப்போது அவர்களுக்கு உரிய இடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார். மேலும் இது போன்ற நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், 10,774 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 8 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்றார். இதே போன்று அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார். 

ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள் முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாக கூறிய பிரதமர், இஸ்லாமிய சகோதரிகளின் உரிமையை காக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். இதே போன்று பயங்கரவாதத்தை வேரறுக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாகிப்ஹஞ்ச்சில் அமைக்கப்பட்டுள்ள ஆற்று வழி கப்பல் போக்குவரத்திற்கான முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கங்கை ஆற்றின் கரையில் 290 கோடி ரூபாய் செலவில் 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் நிறைவு பெற்று புதிய ஆற்றுவழி போக்குவரத்து முனையம் திறக்கப்பட்டுள்ளது. நேரடியாக 600 பேருக்கும் மறைமுகமாக 3000 பேருக்கும் வேலை வாய்ப்பை அளித்துள்ள இந்த முனையத்தின் மூலம் ஆண்டுக்கு 30 லட்சம் டன் சரக்கை கையாள முடியும்.

நீர்வழி போக்குவரத்தில் சரக்குகளை கொண்டு செல்வதால் எரிபொருள் சிக்கனமும், நேர சிக்கனமும், செலவு குறைவும் ஏற்படும். ஏற்கனவே காசியில் நாட்டின் முதல் ஆற்றுவழி போக்குவரத்து முனையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது இரண்டாவது முனையம் ஜார்க்கண்டில் திறக்கப்பட்டுள்ளது .

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே