விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ரெட் லேபிள் வெளியிட்டுள்ள விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. என்ன விளம்பரம் அது?? என்ன சர்ச்சை என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அரசியல் அமைப்பு சட்டம் சொல்லும் மிக முக்கிய செய்தி இதுதான். ஆனால் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அது சர்ச்சையாகும் கண்டனத்தைப் பெருவதும் இயல்பானது. இந்தியா போன்ற பல மதத்தினர் வாழும் ஜனநாயக தேசத்தில் அனைத்து மத உணர்வுகளையும் மதிக்க வேண்டியது கட்டாயமாகிறது.
அண்மையில் உணவு டெலிவரி கொண்டு வந்தவர் இஸ்லாமியர் என்பதால் ஆர்டரை கேன்சல் செய்து விட்டதாக ஒருவர் பதிவிட, அவர் இணையவாசிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகினார்.
அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது ரெட் லேபிள் நிறுவனம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்றில் இந்து ஒருவர் விநாயகர் சிலையை வாங்குவதற்காக வருகிறார். அவரிடம் அனைத்து சிலைகளும் காண்பித்து விட்டு, குல்லா எடுத்து மாட்டிக்கொள்கிறார். கடைக்காரர் இஸ்லாமியர் என தெரிந்ததும் சிலை வாங்க வந்தவர் அங்கிருந்து கிளம்ப முயல்வது போன்ற அந்த விளம்பரம் அமைந்திருக்கிறது.
ரெட் லேபில் நிறுவனத்தின் இந்த விளம்பரத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்துக்கள் சகிப்பு தன்மையற்றவர்களா?? என ட்விட்டரில் அந்த நிறுவனத்தை கண்டித்து வருகிறார்கள். BOYCOTT ரெட் லேபிள் என்ற ஹாஷ்டாஃகை உருவாக்கி அந்த நிறுவனத்திற்கு எதிராக கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.
அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் தவறு இழைப்பது இயல்பானது. ஆனால் அதற்கு ஒட்டுமொத்த மதத்தினரின் மனம் புண்படுவது போல விளம்பரம் வெளியிடுவது சரியா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். குறிப்பிட்ட இந்த விளம்பரத்தை அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஆர்டரை ரத்து செய்ததாக இந்து ஒருவர் பதிவிட்ட போது உங்களுக்கு சகிப்புத்தன்மையே இல்லையா என கேள்வி எழுப்பிய அதே சமூக வலைதள வாசிகள் தான் இந்துக்கள் சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் என்ற ரீதியில் வெளியான விளம்பரத்திற்கும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியாவின் வெற்றிக்கான மந்திரம் அதனை உடைக்கும் செயல்களில் யார் ஈடுபட்டாலும் இந்தியர்கள் குரல் எழுப்புவார்கள் என்பதே நிதர்சனம்.