விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

சென்னையில் பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டிற்கு வந்த விஜய் ரசிகர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றதால் தடியடி நடத்தப்பட்டது.

சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரி ஆடிட்டோரியத்தில் விஜயின் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பங்கேற்றதால் அவரை காண ரசிகர்கள் கல்லூரி வளாகம் மற்றும் கல்லூரிக்கு செல்லும் சாலை என பல பகுதிகளில் திரண்டனர்.

இவர்கள் கல்லூரிக்குள் சென்றுவிடாமல் தடுக்க போலீசார் ஆங்காங்கே பேரிகார்டுகள் அமைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் விஜய் ரசிகர்கள் போலீசாரின் பேரிகார்டுகளை அகற்றிவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனால் போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே சாய்ராம் கல்லூரிக்கு செல்லும் சாலை முழுவதும் நடிகர் விஜயின் பிகில் பட பாடல் வெளியீட்டு விழாவை காணச் சென்ற ரசிகர்கள், சினிமா பிரபலங்களின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறுகிய சாலை என்பதாலும் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் திரண்டதாலும் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அந்த சமயத்தில் அங்கு வந்த ஆம்புன்ஸ் ஒன்று தொடர்ந்து செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கும் நிலை ஏற்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே