விஜய்யின் 64 வது திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில், வில்லனாக நடித்த முன்னணி கதாநாயகர்கள் குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு.
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் வில்லன்கள் ஆவதும் வில்லன்கள் ஹீரோக்களாக மாறுவதும் சாதாரண விஷயம்தான். வில்லனாக நடிக்கும் போது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் சமீபகாலமாக முன்னணி ஹீரோக்கள் கூட வில்லனாக நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீபகாலத்தில் ஹீரோ வில்லனாக நடிக்கும் ட்ரெண்டுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் அரவிந்த்சாமி. வில்லன் என்றால் கரடுமுரடாக கணீர் குரலில் பேசுபவர்களாக தான் இருக்க வேண்டும் என்ற பார்முலாவை உடைத்து பெண்களின் மனம் கவரும் அழகிய வில்லனாக “தனிஒருவன்” படத்தில் மிரட்டி இருப்பார் அரவிந்த்சாமி.
இதற்கு அடுத்தபடியாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த வில்லன் என்று அருண் விஜயை சொல்லலாம். “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அஜீத்துடன் அவர் ஆடிய கண்ணாம்பூச்சி ஆட்டம் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தது.
ஒரு காலத்தில் வில்லன்களை பறந்து பறந்து அடித்த ஆக்சன் கிங் அர்ஜுன் தற்போது ஹாண்ட்சம் வில்லனாக மாறி தமிழ் சினிமா ஹீரோக்களை பந்தாடி வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்த கடல், விஷாலுடன் அவர் நடித்த மங்காத்தா, இரும்புத்திரை ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.
ஒரு காலத்தில் பெண்களை துரத்தி துரத்தி காதல் செய்த நவரச நாயகன் கார்த்திக்கையும் இந்த வில்லன் ஆசை விட்டுவைக்கவில்லை. தனுஷுக்கு குடைச்சல் கொடுக்கும் அழகிய வில்லனாக “அனேகன்” படத்தில் அசத்தியிருப்பார் கார்த்திக்.
பார்த்திபன் மாதிரியான சீனியர்கள் தொடங்கி வினய், பிரசன்னா, நரேன், பிரித்திவிராஜ், விக்ராந்த் மாதிரியான இளம் நடிகர்களும் வில்லன் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் நீதான் என்று விஜய்க்கு அவருடைய அம்மா ஷோபா நிகழ்ச்சி கடிதம் எழுதி உள்ள நிலையில், சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி எங்கள் தளபதிக்கும் நடித்தால் எங்களுக்கு சந்தோஷம்தான் என்று வரவேற்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.