விஜயசாந்தி மீண்டும் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்

பிரபல நடிகை விஜயசாந்தி மீண்டும் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தசரா பண்டிகைக்கு முன்பாக விஜயசாந்தி பாஜகவில் இணைவார் எனவும், மஹாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும் பாஜக வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

பாஜகவில் இணைவது தொடர்பாக விஜயசாந்தியுடன், கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கடந்த 15 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி விஜயசாந்தியை பாஜகவில் இணையச் செய்ய தெலங்கானா மாநில பாஜக தலைவர்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் டெல்லியில் பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து விஜயசாந்தி கட்சியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

விஜயசாந்தி பாஜகவில் இணையப்போவது குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்தாலும், எப்போது எவ்வாறு இணைவார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை விஜயசாந்தி, 1998ம் ஆண்டு பாஜகவில் இணைந்து மகளிர் பிரிவு செயலாளர்  பதவியில் செயல்பட்டு வந்தார்.

பின்னர் பாஜவிலிருந்து விலகி, தனிக்கட்சியை ஆரம்பித்தார். தொடர்ந்து அந்தக் கட்சியை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் இணைத்த அவர், பின்னர் 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே