வாகனங்களுக்கான வரி குறைப்பு குறித்து GST கவுன்சில் கூட்டத்தில் முடிவு

மோட்டார் வாகன துறைக்கான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாள்  நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை கிண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மோட்டார் வாகன துறை சரிவுக்கு அதிக வரி விதிப்பு மட்டுமே காரணம் அல்ல என்றார்.

ஓலா, உபர் போன்ற வாடகை கார்கள் மற்றும் அரசுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் போன்ற பல்வேறு காரணிகளால் வாகன விற்பனை சரிந்துள்ளதாக கூறினார்.

ஆட்டோமொபைல் துறைக்கான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், அது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று நிர்மலா தெரிவித்தார். 

ஜிடிபி ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார வளர்ச்சியின் ஒரு அங்கம் என்று விளக்கம் அளித்த  அவர், இதற்கு முந்தைய காலகட்டத்திலும் ஜிடிபி சரிவை சந்தித்துள்ளதாக கூறினார்.  வேலை இழப்புகள், பொருளாதார நிலை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், அனைத்து துறை வல்லுனர்களுடனும் அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். 

100 லட்சம் கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்தெந்த துறைக்கு உட்கட்டமைப்பு தேவைப்படுகிறது என்பது குறித்து ஆராய அரசு குழுவை அமைத்து இருப்பதாகவும், அந்தக் குழு கொடுக்கும் பரிந்துரை அடிப்படையில் உள்கட்டமைப்பு நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே