வங்கிகளை இணப்பதன் மூலம் வர்த்தகம் உயரும்

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் அந்த வங்கிகள் நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியாக உருவெடுக்கும். அந்த வங்கிகளின் மொத்த வர்த்தகம் 18 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.

இதேபோன்று கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் ஒருங்கிணைப்பதன் மூலம் மூன்றாவது பெரிய வங்கியாக மாறும். அவற்றின் மொத்த வர்த்தகம் 15.2 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.

யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்படுவதின் மூலம் அவை நாட்டின் நான்காவது பெரிய வங்கியாக மாறும். அவற்றின் மொத்த வர்த்தகம் 14.6 லட்சம் கோடியாக உயரும்.

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைப்பதன் மூலம் புதிய வங்கி நாட்டின் ஏழாவது பெரிய வங்கியாக மாறும்.அவற்றின் மொத்த வர்த்தகம் 8.08 லட்சம் கோடியாக உயரும்.

வங்கிகள் இணைக்கப்படுவதால் அவற்றின் வாடிக்கையாளர்களின் செக் புத்தகம் மாறும். கணக்கு எண், வாடிக்கையாளர் எண், வங்கியின் ஐ.எப்.எஸ்.சி எண் ஆகியவையும் மாறும். வங்கியின் ஐ.எப்.எஸ்.சி எண் மாறுவதால் அந்த தகவலை வருமானவரித்துறை, காப்பீடு உள்ளிட்டவற்றில் மாற்ற வேண்டியது வரும். மாத தவணை கட்டுவதற்கு புதிய நடைமுறை வரும். வங்கி மூலமாக செலுத்தும் பில்லுகளுக்கான கட்டணம் குறித்து புதிய அறிவிப்புகள் வரும். கணக்கு வைத்துள்ள வங்கியின் இடம் மாறக்கூடும். வங்கியின் சின்னம் உள்ளிட்டவை மாறும்.

சேமிப்பு கணக்கின் வட்டி விகிதமும் மாறக்கூடும். இதே நேரத்தில் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் மாறாது. வங்கி ஒருங்கிணைப்பு மூலம் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் கூடினாலும் குறைந்தாலும் நிரந்தர வைப்பு தொகை வட்டியில் எந்த மாற்றமும் இருக்காது. கடன்களுக்கான தவணை தொகையும் மாறாது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே