ரூ.20,000 கோடி நிலுவைத் தொகை அக்டோபரில் வழங்கப்படும்

சரக்கு மற்றும் சேவைகளுக்காக சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசு துறைகள் உடனடியாக செலுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முக்கிய அமைச்சக செயலாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களிடம் பணம் தாராளமாக புழங்க வேண்டும் என்றும், குறிப்பாக மத்திய அரசு துறைகளுக்கு சரக்குகளும் சேவைகளும் வழங்கிய சிறு குறு நிறுவனங்களின் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதுவரை நிலுவையில் இருந்த 60 ஆயிரம் கோடி ரூபாயில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டு விட்டது என்றும் தெரிவித்த நிர்மலா சீதாராமன், மீதமுள்ள 20 ஆயிரம் கோடி ரூபாயை அக்டோபர் மாதத்தில் வழங்குமாறு அனைத்து அரசுத் துறைகளிடமும் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே