ரூ.12 கோடி ஊழல்! துறைமுக அதிகாரிகள் உடந்தை

ஒரு பொருளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனமானது,  உற்பத்தி தொடங்கி ஏற்றுமதி வரை, பல்வேறு வரிகள் மற்றும் கட்டணங்களைச் செலுத்துகிறது. அவ்வாறு செலுத்தப்படும் கட்டணம் மற்றும் வரியில், 8 முதல் 10 விழுக்காட்டை ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மத்திய அரசு வழங்குகிறது.

தயாரித்த பொருளை ஏற்றுமதி செய்த பிறகு, அதற்கு செலுத்தப்பட்ட வரி மற்றும் கட்டணம் தொடர்பான முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்து, ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களுக்கான ஊக்கத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

கண்டெய்னர்களைக் கையாளும் நிலையங்கள் மற்றும் சரக்குகளை சேகரித்து வைக்கும் டிப்போக்கள் வழங்கும், இறக்குமதி ஏற்றுமதி குறியீடுகளை வைத்து 8 முதல் 10 விழுக்காடு வரையிலான ஊக்கத் தொகையை, குறிப்பிட்ட ஏற்றுமதியாளரின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்தும்.

இந்த நிலையில், ஒரு பொருளைக் கூட ஏற்றுமதி செய்யாமல், தவறான மற்றும் திருத்தப்பட்ட 260 ரசீதுகளை வைத்து 12 கோடியே 45 லட்சம் ரூபாய் அளவுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

துறைமுக சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த மோசடி நடைபெற்றிருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

ரசீதுகளைப் பதிவு செய்தல், ஆய்வு செய்தல், ஏற்றுமதி செய்யப்படும் பொருள் தொடர்பான உண்மையான ரசீது எதுவுமே இல்லாமல் ஊக்கத் தொகைக்கு அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

வைஷ்ணவி நிட் கார்மெண்ட்ஸ், ஏ.வி. டெக்ஸ், RP எண்டர்பிரைசஸ், எம்.எம். எண்டர்பிரைசஸ், திருப்பூரைச் சேர்ந்த டீ.எம். இம்பெக்ஸ்  சென்னையைச் சேர்ந்த இண்டர்லுக் கார்கோ கிளியரிங் மற்றும் ஃபார்வேர்டிங் PP டெக்ஸ்டைல்ஸ், ஓசூரைச் சேர்ந்த எஸ்.வி. கார்மெண்ட்ஸ், மேட்டூரைச் சேர்ந்த யூ.எஸ்.குரூப் அண்ட் எண்டர்பிரைசஸ்  ஆகிய நிறுவனங்கள் மீதும், பாபு ஆப் பேசேஜ் கார்கோ, சைமன் செல்வக்குமார் ஆப் எஸ்.கே.ஆர். சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், செந்தில் பிரபு மற்றும் செல்வம் ஆப் புனித ஜான் ஃபிரைட் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீதும் மதுரையில் உள்ள சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள புனித ஜான்ஸ் இன்லேண்ட் கண்டெய்னர் டிப்போவில் கணினியின் அடையாள எண் மற்றும் கடவுச்சொல்லை பெற்றுக் கொண்டு, அவற்றின் மூலம், ஏற்றுமதி செய்யப்படாத பொருளை பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஊழல், ஏமாற்றுதல், மோசடி, கூட்டுச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேவேளையில், ஊழலுக்கு உடந்தையாக இருந்த துறைமுக அதிகாரிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே