ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
நோயாளிகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த ஆண்டு முதல் செப்டம்பர் 17ம் தேதி-ஐ உலக நோயாளிகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருந்தது.
அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துமனையில் அதன் முதல்வர் நாராயணசாமி தலைமையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நோயாளிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர்.
உறுதிமொழி ஏற்ற பிறகு மருத்துவமனை வளாகத்தில் பேரணியாக சென்ற ஊழியர்கள் கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது பயிற்சி செவிலியர்கள் சிலர் நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போல உடையணிந்து கொண்டு குறும் நாடகம் நடித்து காட்டினர்.
அதில் நோயாளிகளை எவ்வாறு அணுகுவது, நோயாளிகளிடம் நோயை கண்டறிந்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து குடும்பத்தினருக்கு எப்படி பக்குவமாக எடுத்துரைப்பது என்பவனவற்றை தத்துரூபமாக செய்து காண்பித்தனர்.
தொடர்ந்து ஒவ்வொரு நோயாளிகளை அணுகும்போது அவர்களுக்கு ரத்த பரிசோதனை, சிகிச்சை அளித்த பின்னர் மருத்துவர்கள், செவிலியர்கள் எவ்வாறு கைகளை கழுவுவது என்பது குறித்தும் வெண்திரையில் வீடியோ விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள ஏழு வகையான கை கழுவுதல் முறை அதில் இடம்பெற்றிருந்தன. இறுதியில் புனித தொழிலான மருத்துவத்தை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி, நிகழ்ச்சி நிறைவடைந்தது.