ரவுடி மணிகண்டன் வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் குடியிருப்பில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மணிகண்டனை பிடிக்க முயன்ற போது உதவி ஆய்வாளர்களை தாக்கியதாக, போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.

இந்த வழக்கை விரிவாக விசாரிக்க அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் தனஞ்செழியன் கடந்த 2 நாட்களாக மணிகண்டனின் உறவினர்கள் இடமும், சம்மந்தப்பட்ட காவலர்கள் இடமும், சம்பவம் நடந்த வீட்டிலும் விசாரணை மேற்கொண்டு வந்தார்.

நேற்று கொரட்டுரில் உள்ள என்கவுண்டர் நடத்தப்பட்ட அடுக்கு மாடி வீடுகளில் தனித் தனியாக சென்று விசாரணையை மேற்கொண்டார்.

அப்போது ரவுடி மணிகண்டன் வீட்டில் அதிக அளவில் நாட்டு வெடி குண்டுகள் சணல்களில் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது.

முதலில் வெடிகுண்டை எதிராளிகள் மீது வீசி விட்டு அதன் பிறகு தாக்குதல் நடத்தி கொலை செய்வது மணிகண்டனின் வழக்கம் என்று கூறப்படுகிறது.

வெடிகுண்டுகள் செய்வதிலும் நிபுணத்துவம் பெற்றவன் என்பதால் வீட்டில் அவற்றை வைத்து இருந்திருக்கலாம் என்று சொல்லப்பபடுகிறது.

இது பற்றி அறிந்ததும் அங்கு உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மோப்பநாய் தாமரையும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அங்கு 2க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்க தயார் நிலையில் உள்ளதை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

மேலும் நாட்டுவெடிகுண்டுக்கு பயன்படுத்தக் கூடிய வெடிமருந்து பாக்கெட்டுகள் அங்குள்ள சூட்கேசில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளை பாதுகாப்பாக பேக்கிங் செய்து வெடிகுண்டு நிபுணர்கள் பத்திரமாக வெளியே எடுத்து வந்தனர்.

தொடர்ந்து இவைகளை பத்திரமாக அப்புறப்படுத்தும் பணியில் அம்பத்தூர் உதவி காவல் ஆணையர் கண்ணன் மற்றும் பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் ஆகியோர் ஈடுபட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே