மொழி மீது மொழி திணிக்கப்படுவது தான் உலகின் மிகப் பெரிய வன்முறை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க மாநில மாநாட்டில் பேசிய கவிஞர் வைரமுத்து, இது போன்ற மாநாட்டை நடத்துவதே நாகரிகத்தில் எங்கோ கறைபட்டு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது என குறிப்பிட்டார்.
தான் வளர்ந்த பெரியகுளத்தில் இசுலாமியர்களுடனான உள்ள நட்புறவு குறித்து சிலாகித்த அவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பின்பற்றிய மதநல்லிணக்கத்தை அவருக்கு பின் வந்த தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர் கூறுகையில், திணித்தல் தான் தவறு என்றும், “உடல் மீது உடல் திணிக்கப்படுவது, மதம் மீது மதம் திணிக்கப்படுவது, மொழி மீது மொழி திணிக்கப்படுவது தான் உலகின் மிகப்பெரிய வன்முறை” என குறிப்பிட்டார். தற்போது நிலவில் இறங்கிய இந்தியனை பாதாளத்தில் இறக்கிவிட வேண்டாம் எனவும் வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார்.