முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால் முதலமைச்சருக்கு பாராட்டு விழா

வெளிநாடு சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால், பாராட்டு விழா நடத்த தயார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன?? அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு, செயல்படும் தொழிற் நிறுவனங்கள் எத்தனை?? அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. சார்பில் ‘பாராட்டு விழா’ நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், தனது சவாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா? என்று வினவி இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே