முதன்முறையாக தந்தை – மகன் இசைக்கூட்டணி

இசையமைப்பாளர் இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக ஒன்றாக இணைந்து இசையமைக்க உள்ளனர். இதனால் இருவரது ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலக இசை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக வலம் வந்தவர் இசை ஞானி இளையராஜா. 1970 களிலும், எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் இளையராஜா படைத்த இசை காவியங்கள் காலத்தால் அழியாத இசை கல்வெட்டுகளாக திரை உலக சுவற்றில் பதிந்துள்ளன.

ரஜினி, கமல் முதல் ராமராஜன் வரை இவரது இசையால் ஜொலித்த நட்சத்திரங்கள் ஏராளம். இளையராஜா இசைக்காகவே வெள்ளி விழா கொண்டாடிய படங்கள் ஏராளம்.

இளையராஜாவை போன்று அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் தமிழ் இசை உலகில் தற்போது கோலோச்சி வருகிறார். யுவனின் அசத்தல் இசைக்கு இன்றைய தலைமுறையில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

1986 ஆம் ஆண்டு மோகன், அமலா நடிப்பில் வெளியான “மெல்ல திறந்தது கதவு” படம் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்கின்ற இசை ஜாம்பவான்கள் ஒன்றாக இணைந்து இசையமைத்தது முக்கிய காரணமாக அமைந்தது.

எம்.எஸ்.வி யுடன் இணைந்து கூட்டணி அமைத்து இசை ராஜாங்கம் நடத்திய இளையராஜா, விரைவில் வெளியாக இருக்கும் படத்திற்கு தனது மகனுடன் இணைந்து இசையமைக்கவுள்ளார். இந்த அறிவிப்பு இருவரது ரசிகர்களையும் உற்சாகம் அடைய வைத்திருக்கிறது.

சீனுராமசாமி இயக்கும் “மாமனிதன்” என்ற படத்துக்காக இளையராஜாவும், அவரது மகன் யுவன் இசை கூட்டணி அமைக்க உள்ளனர்.

விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்திற்கு தாமும் தந்தையும் இணைந்து இசையமைக்க உள்ளதாக ட்விட்டரில் மகிழ்ச்சியை பதிவிட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

ஒரே படத்தில் தந்தையும், மகனும் இணைந்து இசையமைக்க இருப்பதால் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் புது இசை அனுபவத்தை பெற ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே