அக்டோபர் மாதம் இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்க உள்ள காரணத்தால், மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சாலை விரிவாக்கம், பூங்காக்கள் பராமரிப்பு, நடைபாதை சீரமைப்பு, மின் விளக்குகள் பொருத்துதல், பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
சீனாவில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் குழுவானது தேசிய பாதுகாப்பு குழுவுடன் சேர்ந்து மாமல்லபுரத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.
மாவட்ட காவல்துறையினரையும் சந்தித்து அந்தக் குழு ஆலோசனை நடத்திச் சென்றது. இந்த நிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான அதிகாரிகள் இன்று மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர்.
அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை மற்றும் பல்வேறு பூங்காக்களை அவர்கள் ஆய்வு செய்தனர்.
மரகதப் பூங்காவை விரைவாக சரிசெய்யுமாறு ஊழியர்களை, தலைமைச் செயலர் சண்முகம் கேட்டுக் கொண்டார். வெண்ணெய் உருண்டைக்குப் பின் புறம் அமைக்கப்பட்டுள்ள 2 தற்காலிக செல்போன் கோபுரங்களை அகற்றுவது தொடர்பாக பி.எஸ்.என்.எல். மற்றும் வோடபோன் அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.
இதுஒருபுறமிருக்க மாமல்லபுரத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவளம், மாமல்லபுரம், பூஞ்சேரி, கேளம்பாக்கம் சந்திக்கும் இடங்களில் கூடுதலாக 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எந்நேரமும், இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனச் சோதனைகளும் தீவிரம் அடைந்துள்ளன. இதனிடையே, மாமல்லபுரத்தில் ஆய்வு செய்து விட்டுச் சென்ற சீன நாட்டுக் குழுவின் ஆலோசனையின் படி, அந்நாட்டு அதிபர் ஸீ ஜின்பிங் மோடியுடனான சந்திப்பிற்கான இடத்தை தேர்வு செய்வார்.
மாமல்லபுரம் குறுகிய இடம் என கருதி, அதை நிராகரிக்கும் பட்சத்தில் வேறு இரு இடங்களையும் தயார் செய்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு இடம் வாரணவாசி என்று தகவல் வெளியாகியுள்ளது.