அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த மாணவியின் தாய் ஒருவர், இந்த பள்ளியில் நடக்கும் அவலங்கள் குறித்து பள்ளி கல்வித்துறைக்கும், காவல் ஆணையருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளார்.
அதில், சில மாதங்களுக்கு முன் பள்ளியில் கலவரம் என்று கேள்விப்பட்டு மகளை பார்க்க சென்ற போது, ஆசிரியர் கிருபானந்தன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரன் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆசிரியர் கிருபானந்தன் சக ஆசிரியர்கள் 12 பேருடன், மாணவர்களை தூண்டிவிட்டு மேசை, நாற்காலி, மின் விசிறி, மின் விளக்கு போன்றவற்றை உடைத்து கலவரத்தில் ஈடுபட்டதை தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் மாணவர்களை ஆசிரியர்கள் சிலர், தலைமை ஆசிரியையுடன், இன்னொரு ஆசிரியரை இணைத்து கானா பாடல் பாடி, டிக்டாக் செயலியில் வெளியிட்டு பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சித்தள்ளதாகவும், இதனை தட்டிக்கேட்ட தனது மகளுக்கு மடிக்கணினி வழங்காமல் புறக்கணித்து, கல்வித்துறைக்கு புகார் அளித்த பிறகு மடிக்கணினி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது மகளை 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்பை என்று கிண்டல் செய்தும், ஆபாசமாக பேசியும், ஆசிட் வீசுவதாகவும் மிரட்டியதால் தனது மகள் கடந்த 5 ந் தேதி முதல் பள்ளிக்கு செல்ல மறுப்பதாகவும்கூறியுள்ளார்.
இதுபற்றி தாம்பரம் போலீசார் விசாரிக்க மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இதையடுத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, பள்ளி விலங்கியல் ஆசிரியர் கிருபானந்தன் உட்பட 12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்ப சட்டம், பொது சொத்தை சேதப்படுத்துதல், ஆபாசமாக பேசுவது, மிரட்டல், சைகையின் மூலம் ஆபாசமாக நடப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.