தொடர் கனமழையால் பீகார் மக்கள் தத்தளித்து வரும் நிலையில், பெண் ஒருவர் தேங்கிய வெள்ள நிரீல் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
பீகார் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், நகரங்களில் மார்பளவு வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களில் வெள்ளம் புகுந்து, மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்து வரும் பாட்னாவை சேர்ந்த அதிதி சிங் என்ற மாணவி, செந்நிற உடையில் மழை நீரில் நின்றபடி புகைப்படம் எடுத்திருந்தார்.
இப்புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் சவுரப் அனுராஜ் என்பவர் பெண்ணின் புகைப்படத்தை “மெர்மைட் இன் டிசாஸ்டர்” என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, பாட்னாவின் தற்போதைய நிலையை தெரிவிக்கவே இதனை பதிவிட்டதாகவும், அதனை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் என கூறியிருந்தார்.
இந்த புகைப்படத்தை சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்து லைக் செய்து, ஆதரவு கருத்து தெரிவித்திருந்தனர். அதேசமயம் சொந்த லாபத்துக்காக இதுபோன்று புகைப்படம் எடுத்து இயற்கை பேரழிவை ரசிக்க வேண்டாம் என சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.