மனுதாரர்கள் நினைக்கும் உத்தரவுகளை பெற நீதிமன்றம் ஒன்றும் வணிக வளாகமோ அல்லது அரசுக்கு கோரிக்கைகளை அனுப்பி வைக்க தபால்நிலையமோ அல்ல என்று வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
சென்னையில் பயன்படுத்தப்பட்டு வரும் 20 லிட்டர் தண்ணீர் கேனின் வடிவத்தை மாற்றி அமைக்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி, சென்னையை சேர்ந்த தீபா ஸ்ரீ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களை பெண்களால் கையாள முடியவில்லை என்றும், அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் நினைக்கும் உத்தரவுகளை பெற நீதிமன்றம் ஒன்றும் வணிக வளாகமோ அல்லது இது போன்ற கோரிக்கைகளை அரசிடம் கொண்டு போய் சேர்க்க தபால் நிலையமோ அல்ல எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.