ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தாவுக்காட்டைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும், அத்தியூத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருப்பினும் அந்த தம்பதிக்கு குழந்தைப் பேறு இல்லாததால் அதுதொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அண்மையில் சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்குச் சென்ற பஞ்சவர்ணம் கணவனுடன் வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. உறவினர்களின் சமரசத்திற்குப் பின் கணவனின் வீட்டிற்குச் செல்ல அவர் சம்மதித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ராமசாமி – பஞ்சவர்ணம் இடையே மீண்டும் சண்டை ஏற்படவே, அவர்கள் இருவரையும் ராமசாமியின் சகோதரர் கணேசன், தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள தனக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் தங்க வைத்தார். அங்கும் சண்டை தொடரவே ஆத்திரம் அடைந்த பஞ்சவர்ணம், கணவனைக் கொல்லத் திட்டம் போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமசாமியை உணவில் விஷம் வைத்துக் கொல்லப் போவதாக பஞ்சவர்ணம் அடிக்கடி கூறி வந்துள்ளார். நேற்று முன் தினம் தனது திட்டத்தை நிறைவேற்ற நினைத்த பஞ்சவர்ணம், தக்காளி சாதம், முட்டை பொறியல், ரசம் சமைத்து, அதில் எலியைக் கொல்லப் பயன்படுத்தப்படும் விஷத்தை சேர்த்துள்ளார்.
ராமசாமியை மடியில் படுக்க வைத்து ஊட்டி விட்டுள்ளார். நீ தான் எனக்குப் பிள்ளை என்று மனைவி கொஞ்சிப் பேசியதை நம்பி, நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல் சாப்பிட்டுள்ளார் ராமசாமி. உணவை ஊட்டி விட்ட பின்னர் வெளியே வந்த பஞ்சவர்ணம், அருகில் உள்ள கணேசனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு, கணேசனை சந்தித்த அவர், கணவனுக்கு விஷம் கலந்த உணவை ஊட்டி விட்டதைச் சொல்லி, இன்னும் சற்று நேரத்தில் தங்கள் சகோதரர் இறந்து விடுவார் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணேசன், உடனடியாக தனது அண்ணனை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு ராமசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஞ்சவர்ணத்தை தேவிப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.