போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வயதான பாயம்மா..!

சென்னை தரமணி பகுதியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் காலை மாலை நேரங்களில் மகாத்மா காந்தி 100 அடி சாலையை கடந்து தான் செல்லவேண்டும்.

மேலும் பெரிய பெரிய தொழில் நிறுவனங்களும் சாப்ட்வேர் கம்பெனிகளும் இருப்பதால், ஆயிரக்கணக்கானோர் சாலையை கடப்பதால், முக்கிய சந்திப்பான முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இதனால் மானவர்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

இந்நிலையில் தரமணியில் வசிக்கும் நடுத்தர வயதைக் கடந்த சகூர் பானு என்பவர், தனி ஒரு ஆளாக நின்று போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி வருகிறார்.

பாயம்மா என்று அன்போடு அழைக்கப்படும் இவர் மருத்துவமனை ஒன்றில் பணியாளராக வேலைபார்த்துக்கொண்டே காலை மாலை நேரங்களில் இங்கு வந்து பணியில் ஈடுபடுகிறார்.

போக்குவரத்து போலீசார் செயல்படுவதை பார்த்து தெரிந்து கொண்ட இவர், சாலையின் நடுவில், கையில் STOP போர்டுடன், விசில் ஊதி சுறுசுறுப்புடன் செயல்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி வருகிறார்.

பாயம்மா வந்தது முதல் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்று வருவதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்த சாலையை கடக்க நேரம் ஆவதால் நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், பாயம்மா உதவியால் தற்போது அந்த நிலை இல்லை என்றும் கூறுகிறார் பள்ளி மாணவர்.

ஒரு சமயம், இந்த சாலையை கடக்க தான் முயன்றபோது, வாகனம் மோதியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், இதில் குணம் அடைந்ததும், பள்ளிக்குழந்தைகள், பெண்களுக்கு உதவும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பாயம்மா தெரிவித்துள்ளார்.

இவரது சேவையை பாராட்டும் போலீசார் அவருக்கு விசேஷ உடையும், STOP போர்டும் வழங்கியுள்ளனர்.

தற்போது போக்குவரத்து விதிகளை மீறிச்செல்ல நினைக்கும் வாகன ஓட்டிகள் கூட, பாயம்மாவுக்கு மதிப்பளித்து நின்று கவனித்து செல்கிறார்கள்.

சாலை விதிகளை சரிவர மதித்து செல்ல வேண்டும் என்பதை இந்த வயதான பெண்மணியின் சேவையைப் பார்த்தாவது வாகன ஓட்டிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே