பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்ததால் ஏற்பட்ட இழப்பை எதிர்கொள்ள முடியாமல் தமிழகமும், தமிழர்களும் திணறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரதமருக்காக பேனர் வைக்க அனுமதி கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தை அணுகி இருப்பதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ஒழுங்கற்ற பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர முன்னோடியாக முதல் நடவடிக்கை எடுத்தால், தமிழர்களின் உணர்வுகள் மீது பிரதமர் கொண்டுள்ள அக்கறையை பிரதிபலிப்பதாக அமையும் என்று தெரிவித்துளளார்.
மேலும் அதுவே மிகப்பெரிய விளம்பரத்தைப் பெற்றுத் தரும் என்றும் கமல்ஹாசன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.