சென்னை அருகே பெண் மென்பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி அவர் மாயமானார்.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அவரை போலீசார் தேடி வந்த நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி அன்று சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
விசாரணையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த உஜ்ஜல் மண்டல், உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
இதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.