புவிசார் குறியீடு என்றால் என்ன? புவிசார் குறியீட்டால் என்ன பயன்?

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு இந்திய புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு என்றால் என்ன..?

புவிசார் குறியீடு வழங்கப்படுவதனால் அத்தகைய பொருட்களுக்கு என்ன பயன்?? என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

இந்தியாவின் ஒவ்வொறு மாநிலத்திலும் அங்குள்ள நிலத்தின் தன்மை, நீரின் தன்மை, தட்பவெட்ப நிலை ஆகியற்றை பொறுத்து அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரம் மாறுபடுகிறது. எனவே பாரம்பரியமாக பல நூறு ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், உணவு வகைகள், விவசாயம் சார்ந்த இடு பொருட்கள் என பாரம்பரியமாக உருவாக்கப்பட்டு வரும் பொருட்களை உலக நாடுகள் அறிந்துகொள்ளும் வகையில் ஏற்றுமதி செய்வதற்கு அங்கீகாரம் அளித்து புவிசார் குறியீடு இந்திய அரசால் வழங்கப்படுகிறது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவு சார் சொத்துரிமை துறை, புவிசார் குறியீடு என்ற அங்கீகாரத்தை 2003ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

இந்திய அளவில் இதுவரையில் 333 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில், சேலம் பேப்ரிக் துணிகள், காஞ்சீபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், மதுரை மல்லி, பத்தமடை பாய், ஈரோடு மஞ்சள், தஞ்சாவூர் ஓவியதட்டு, பழனி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு உள்ளிட்ட 33பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதையடுத்து அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பட்சத்தில் 3மடங்கு விலை உயரும் என்பதால் உற்பத்தியாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

மேலும் மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், பண்ருட்டி பலாப்பழம், சீரக சம்பா அரிசி என பல்வேறு பொருட்கள் புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.

தனி நபர் புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பிக்க முடியாது என்றும், அந்த பொருளின் சார்புடைய சங்கத்தின் மூலமே புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பிக்க முடியும் என்று புவிசார் குறியீடு துறையின் துணை பதிவாளர் சின்னராஜா தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி தேங்காய் போன்ற பாரம்பரியமிக்க விவசாய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பித்தால் ஆய்வு செய்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிரபலமாக உள்ள நூற்றாண்டு பழமையான உணவு பொருட்கள், விவசாய இடு பொருட்கள், கைவினைபொருட்கள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற்று ஏற்றுமதி செய்வதால் வருமானம் அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே