புழல் சிறையில் கைதிகள் – அதிகாரிகள் இடையே மோதல்

புழல் சிறையில் கைதிகளாக உள்ள அடிப்படைவாத அமைப்பு சேர்ந்து இருவருக்கும் சிறை அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

அல்உமா அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் இருவரும் புழல் சிறை அழகு ஒன்று உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிறை கைதிகளுக்கு ஒவ்வொரு வாரமும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும். சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மனு அளிக்காமல் அவர்கள் சார்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் சிறையில் நடப்பது குறித்து மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனை அடுத்து உயர் பாதுகாப்பு பிரிவிற்கு சிறைக் காவலர்களுடன் சென்ற கண்காணிப்பாளர் செந்தில்குமார் அவர்களிடம் ஏன் தன்னிடம் மனு கொடுக்கவில்லை என கேட்டதாகவும் இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு செந்தில்குமாரை பிலால் மாலிக் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த செந்தில்குமார் பிலால் மாலிக்கை அறைந்ததாகவும் இதனையடுத்து பிலால் மாலிக் கண்காணிப்பாளர் செந்தில்குமாரை கீழே தள்ளியதால் மற்ற காவலர்கள் பிலால் மாலிக்கை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் புழல் சிறையில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அல்உமா அமைப்பை சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாக மேலும் சில கைதிகளும் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக புழல் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே