புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழாவையொட்டி குடியேற்றத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பெருவிழாவானது இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முன்னதாக புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியானது முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனிதம் செய்து சிறப்பு திருப்பலிக்கு பின்னர் ஆலய கொடி மரத்தில் ஏற்றப்பட உள்ளது.

விழா தொடங்கியதும் நாள்தோறும் இந்தியா முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர் என்பதால் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெருவிழாவானது வருகிற செப்டம்பர் 8ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், கூட்டுப்பாடல் திருப்பலி, நற்கருணை ஆசிர் என சிறப்பு நிகழ்ச்சிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடத்தப்படவுள்ளது.

முக்கிய நிகழ்வான மாதாவின் தேர் பவனி செப்டம்பர் ஏழாம் தேதி நடைபெறவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே