வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் ஃபிட் இந்தியா இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள நிலையில் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஃபிட் இந்தியா இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி முதல் ஆளாக களமிறங்கி உள்ளார் என்று கூறலாம். இந்த இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் முன்பே தன் ட்விட்டரில் யோகாசனம் செய்யும் வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதுமட்டுமின்றி டெல்லியில் நடைபெற்ற ஃபிட் இந்தியா இயக்கத் தொடக்க விழாவில் பங்கேற்றத்துடன், இதனை எவ்வாறு தேசிய இயக்கமாக மாற்றுவது என்பது தொடர்பாகவும் தன் ஆலோசனைகளையும் நடிகை ஷில்பா ஷெட்டி வழங்கினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரும் தன் ஆதரவை தெரிவிக்கும் வகையில் தன் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதுதவிர, பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், வருண் தவான் ஆகியோர் உடன் தெருவில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவையும் பதிவேற்றி ஃபிட் இந்தியா இயக்கத்தை அனைவரும் கடைபிடிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
பிரபல இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், கடற்கரையில் குத்துச் சண்டை இடுவது போன்ற வீடியோவை தன் ட்விட்டரில் பதிவிட்டு ஃபிட் இந்தியா இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றும், விளையாடுவது போன்று வீடியோக்களையும் பதிவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதேபோல் பிரபலங்கள் மற்றும் இன்றி பல்வேறு தரப்பினரும் ஃபிட் இந்தியா இயக்கத்தை ஆதரித்துப் பதிவிட்டதை அடுத்து தேசிய அளவில் ஃபிட் இந்தியா இயக்கம் ட்ரெண்டாகியது.