பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் அந்நாட்டில் அடுத்த வாரத்தில் இருமுறை சந்திக்கின்றனர். பிரதமராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற பிறகு, மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை ஏற்கெனவே இருமுறை சந்தித்துப் பேசியுள்ளார்.
ஜி20 உச்சி மாநாட்டின் போது ஜப்பானிலும், ஜி7 உச்சி மாநாட்டின்போது ஃபிரான்சிலும் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், அமெரிக்கா செல்லும் மோடி, இரு முறை அதிபர் டிரம்பை சந்தித்துப் பேச உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.
வரும் சனிக்கிழமை ஹூஸ்டன் நகருக்கு செல்லும் மோடி, மறுநாள் இந்திய வம்சாவளியினர் மத்தியில் மோடி உரையாற்றுகிறார்.
நலமா மோடி? என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த கூட்டத்தில் பங்கேற்று மோடியுடன் உரையாற்றுகிறார்.
இதேபோல, நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தின்போதும் பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் சந்திக்கின்றனர். 4 மாத இடைவெளியில், இந்திய பிரதமரும் அமெரிக்க அதிபரும் சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும்.
இந்திய-அமெரிக்க உறவின் தன்மையை இந்த சந்திப்புகள் வெளிப்படுத்துவதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் சிரிங்லா கூறியுள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை உறவு மிகமுக்கியமானதாக மலர்ந்திருப்பதாகவும், இந்த நூற்றாண்டின் கூட்டுறவுக்கு இலக்கணமான உறவாக மாறும் திறன்படைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புதான் இதற்கு அடிப்படை என்றும் சிரிங்லா குறிப்பிட்டுள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் கம்காசா உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களையும் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர், வேறு எந்த நாட்டையும்விட அதிக கூட்டு ராணுவப் பயிற்சிகளை இருநாடுகளும் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.