பிரதமர் மோடிக்கு இன்று 69வது பிறந்தநாள்

பிரதமர் மோடி இன்று தமது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடியின் தலைமையில் சமூக நலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.

69 வது பிறந்தநாளை தமது சொந்த ஊரில் கொண்டாட நேற்றிரவு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்கு குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவரத்தும் ,முதலமைச்சர் விஜய் ரூபானியும், அரசு உயரதிகாரிகளும் பாஜக வினரும் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவனுக்கு சென்று இரவில் ஓய்வெடுத்தார் மோடி. இன்று தமது பிறந்தநாளைக் கொண்டாடும் மோடி ஓய்வு எடுக்கப்போவதில்லை என்றும், இன்றும் ஏராளமான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். முதல் வேலையாக தமது தாய் ஹீராபென் அம்மையாரிடம் மோடி ஆசி பெறுகிறார்.

பின்னர் நர்மதா நதிக்கரைக்கு இன்று காலை செல்கிறார். அங்கு நர்மதை அன்னைக்கு ஆரத்தி எடுக்கப்படும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவை எட்டியதை கொண்டாடும் வகையில் மாநிலம் முழுவதும் நர்மதே திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களின் தொடக்க நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

நர்மதா அணை அருகே உள்ள வனவிலங்குப் பூங்காவில் அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ள மோடி, நர்மதா அணை பகுதியில் சுற்றுலா வளர்ச்சி குறித்து ஆலோசிக்க உள்ளார். தொடர்ந்து மாலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார்.

இரவில் கருடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய உள்ள மோடி, நள்ளிரவு 12 மணிக்கு டெல்லி திரும்புகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே