பாதரசத்தை கொடுத்து பச்சிளம் குழந்தைக்கு வைத்தியம்

நாகை மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைக்கு பாதரசத்தை கொடுத்து கை வைத்தியம் செய்ததால் அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

நாகை மாவட்டம் பெருஞ்சேரியை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி சுமித்ராவுக்கு கடந்த 16ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையின் வயிறு வீங்கியது போல இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் ஒரு வாரம் சிகிச்சை அளித்தனர். அப்போது குழந்தை கருப்பு நிறத்தில் வாந்தி எடுத்ததோடு உடல்நிலை மிகவும் மோசமானது. இது குறித்து குழந்தையின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் கேட்டபோது நாட்டு வைத்திய முறைப்படி பாதரசத்தை வெற்றிலைச் சாற்றில் கலந்து கொடுத்ததாக கூறியுள்ளனர்.

பின்னர் கூடுதல் கவனம் செலுத்தி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த இரண்டு நாட்களாக குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தற்போது அபாய கட்டத்தை தாண்டி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே