டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, பல்வேறு நாடுகளின் அரசியல் அமைப்புகளை ஆய்வு செய்த பின், பல கட்சி ஜனநாயக முறையை கொண்டதாக இந்திய அரசியல் அமைப்பு வடிவமைக்கப்பட்டதாக அமித்ஷா குறிப்பிட்டார்.
நாடு முன்னேற்றம் அடையவும், அனைத்து குடிமக்களும் சமமான உரிமைகள் மற்றும் வளர்ச்சியைப் பெறுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமித்ஷா கூறினார்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்து விட்டதா?? அதனால் நன்மை எற்பட்டதா?? என்று மக்களுக்கு சந்தேகம் வந்ததாகவும், அதனால் அதிருப்தியில் இருந்ததாகவும் அமித்ஷா கூறினார்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ஒவ்வொரு நாளும் ஊழல் பற்றிய செய்திகள் வெளியானதாக அமித்ஷா சாடினார்.
எல்லையில் பாதுகாப்பு இல்லை, இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை, சாலையில் மக்கள் போராட்டம் போன்ற செய்திகள் அப்போது வெளியானதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த முடிவும் எடுக்க முடியாமல், செயல் இழந்த நிலையில் இருந்தாக அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு அமைச்சரும் தன்னை பிரதமரைப் போல் நினைத்துக் கொண்டதாகவும், ஆனால் உண்மையில் பிரதமருக்குரிய தகுதியுடன் யாரும் இல்லை என்றும் அவர் சாடினார்.
அதே சமயம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், வாக்கு வங்கியை கணக்கில் கொண்டு எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை என்றும், மக்களின் நன்மைக்காகவே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசுகள் ஒரு பெரிய முடிவை மட்டுமே எடுத்ததாகவும், ஆனால் பாஜக அரசின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஜிஎஸ்டி அமல்படுத்தியது, பாகிஸ்தானில் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது போன்ற 50 முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இது போன்ற முடிவுகளை எடுக்கும் துணிச்சல் முந்தைய அரசுக்கு இல்லை என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை இந்தியா எட்டும் என்றும் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.