பரோலை அக்டோபர் 15 வரை நீட்டிக்க கோரி நளினி மனு

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி, பரோலை அக்டோபர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்க கோரி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக பரோல் வழங்க கோரி வழக்கு தொடர்ந்த நளினிக்கு, ஒரு மாதம் பரோல் வழங்கி ஜூலை 5ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி ஜூலை 25 ஆம் தேதி முதல் பரோலில் உள்ள அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அக்டோபர் 15 வரை பரோல் நீட்டிப்பு வழங்க கோரி நளினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சினை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் சென்னை வந்து விடுவார் என்பதாலும் பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே