பரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இதனால் 2 ஆண்டுகள் வரை அவர் வெளிவர முடியாத நிலை உருவாகி உள்ளது.

பரூக் அப்துல்லாவை ஆஜர்ப்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாள் முதல் தமது வீட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் பரூக் அப்துல்லா நேற்று பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்கட்டமாக அவரை 12 நாள் சிறைவைப்பதற்கான உத்தரவை காஷ்மீர் உள்துறை பிறப்பித்துள்ளது. தேவைப்பட்டால் மேலும் 3 மாதங்களுக்கு இதனை நீட்டிக்க முடியும் .

அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை ஒருவரை எவ்வித விசாரணையும் இல்லாமல் சிறைவைக்க இச்சட்டம் அனுமதிக்கிறது.

இதையடுத்து அவர் வீடே துணை சிறையாக மாற்றப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் உறவினர்களையும் நண்பர்களையும் அவர் சந்திக்க தடையில்லை. பரூக் கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே