ஆப்பிளின் சிரி மூலம் பயனாளரின் அந்தரங்க தகவல்களை ஒட்டு கேட்டதாக தகவல் வெளியானதை அடுத்து 300க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களை அந்நிறுவனம் நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
கிரேடிங் எனும் திட்டத்தின் கீழ் ஆப்பிள் நிறுவனம் தனது சிரி எனும் குரல் கட்டளை சேவையை மேம்படுத்தி வந்தது. அந்த பணிக்கான ஒப்பந்தங்கள் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்றாக 300 ஒப்பந்தங்கள் அயர்லாந்தின் கார்க் பகுதியில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டார்.
அதன்படி ஒரு பணியாளர் தங்களது பணி நேரத்தில் 1000 சிறு கட்டளைகளை கேட்டதாகவும், அவற்றில் சில மிக அந்தரங்க விசயங்களின் பதிவாக இருந்ததாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சர்ச்சைக்குரிய தொழில் பேச்சுக்கள், போதை மருந்து கடத்தல்காரர்களின் பதிவுகளையும் கேட்க நேர்ந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் பயனாளர்களின் அடையாளம் தங்களுக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் வெளியாகி ஆப்பிள் பயனாளர்கள் கடும் கோபத்துக்கு ஆளான நிலையில் 300 ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளதாக ஆப்பிள் தரப்பில் கூறப்படுகிறது