பத்துமணி நேரம் பப்ஜி பக்கவாதத்தில் படுத்த இளைஞன்!

தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இன்றைய நவீன உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஆக மாறி விட்டனர்.

தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப செயலிகளும் வளர்ந்துவிட்டன. இதற்கு போட்டியாக இளைஞர்களை கவரும் வண்ணம் புதுப்புது விளையாட்டுகள் வர தொடங்கிவிட்டன.

அந்த வகையில் இன்று இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் விளையாடப்படுவது “பப்ஜி” என்ற ஆன்லைன் விளையாட்டு. காலையில் ஆரம்பித்தால் போதும் உணவு, தண்ணீர் கூட வேண்டாம். நேரம் கருதாமல் மணிக்கணக்கில் விளையாடுகின்றனர் இன்றைய இளைஞர்கள். இதனால் ஏற்படும் தீமைகளை நாம் எவ்வளவு விவரித்தாலும் அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுகின்றனர்.

இந்த அலட்சியத்தின் பரிசாக ஹைதராபாத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 26ஆம் தேதி ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். பெற்றோர்களும் மகன் மொபைலில் ஏதோ விளையாடுகிறான் என்று கண்டு கொள்ளாமல் தங்களது வேலையை கவனித்துக் கொண்டிருந்தனர்.

நன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென பக்கவாதம் வந்து உள்ளது. இதனால் வலது காலும் கையும் செயல்படாமல் போனது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஏற்பட்ட தடையால் தான் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பெற்றோரிடம் விவரத்தை கேட்டறிந்த மருத்துவர்கள் தொடர்ந்து தூக்கமில்லாமல் பப்ஜி விளையாடியதே பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணம் என்பதை கண்டறிந்தனர்.

இது குறித்து பேசிய மருத்துவர்கள் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்படுவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன என்றும் முன்பெல்லாம் இந்த வகையான பக்கவாதம் வயதானவர்களைத் தாக்கும் ஆனால் தற்போது முறையற்ற பழக்கவழக்கங்களால் இளைஞர்களையும் தாக்க தொடங்கி விட்டது என்றும் கூறினார்.

மேலும் இதற்கான முக்கிய காரணம் உடல் நிலையில் கவனம் கொள்ளாமல், ஆன்லைன் விளையாட்டு களில் தொடர்ந்து நீடிப்பது என்றும் இளைஞர்கள் இதனை மாற்றி கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து பேசிய மாணவரின் பெற்றோர் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் தண்ணீர் குடிக்காமல் ஒரு நாளைக்கு தன் மகன் பத்து மணி நேரம் வரை பப்ஜி விளையாடுவான் என்றும் அந்த தொடர் பழக்கம் இன்று இந்த சூழ்நிலைக்கு தள்ளி விட்டது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

மனதளவிலும் உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்கள் பலரும் தடைசெய்ய வலியுறுத்தி வரும் இந்தச் சூழ்நிலையில் பப்ஜி விளையாட குஜராத் அரசு ஏற்கனவே தடை செய்துவிட்டது.

உண்மையில் பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் தேவைதானா??? உங்களது கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே