டெல்லியில் தனியார் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவன அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கி அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுகளில் வங்கிகளில் பணத் தட்டுப்பாடு என்ற பேச்சே எழவில்லை என்று தெரிவித்தார்.
பல்வேறு சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பணத்தை பெறுவதற்கு எளிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தொழில்துறையினரின் வளர்ச்சி குறித்த தகவல்கள் ஊக்கம் அளிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
பல்வேறு சாதகமான அம்சங்களை தாம் இக்கூட்டத்தில் கண்டதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், வங்கிகள் தொழில்துறையினருக்கு அதிக அளவில் தாராளமாக கடன் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
வரவிருக்கும் பண்டிகை காலங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று தெரிவித்தார்.
பயணிகள் வாகன விற்பனையில் நிலவும் மந்த நிலை உணர்வு சார்ந்தது என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன், வர்த்தக வாகன விற்பனையில் ஏறபட்ட சரிவு ஒன்று அல்லது இரண்டு காலாண்டுகளில் முன்னேற்றம் காணும் என்று வங்கிகள் குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டினார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் கடன் வழங்குவதற்கான முகாம்கள் அமைக்கப்படுவதாக கூறினார்.
பண்டிகைக்காலங்கள் நெருங்குவதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பணப்புழக்கத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.