நெய், தயிர், பால் பவுடர் விலையை உயர்த்தியது ஆவின்..

ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, தயிர், நெய், பால்கோவா போன்ற பால் உப பொருட்களுக்கான விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. 

பசும்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியும், எருமைப் பால் கொள்முதல் விலையில் 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட காரணத்தால் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டது. விலை உயர்வானது கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில், பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, அதன் உப பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி அறிவித்துள்ளது.

அதன்படி ஒரு லிட்டர் நெய்யின் விலை 460 ரூபாயில் இருந்து 495 ரூபாயாகவும்,

ஒரு கிலோ பால் பவுடர் 270 ரூபாயில் இருந்து 320 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

400 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பன்னீர் இனி 450 ரூபாய்க்கு விற்கப்படும்.

230 ரூபாய்க்கு விற்பனையான அரை கிலோ வெண்ணெய் விலையில் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பால்கோவாவின் விலையில் 20 ரூபாயை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.

500 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பால்கோவா இனி 520 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் டிலைட் பால் அரை லிட்டர் விலை 26 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும்,

நறுமண பாலின் விலை அரை லிட்டருக்கு 22 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரை லிட்டர் தயிர் விலையை 25 ரூபாயில் இருந்து 27 ரூபாயாக ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.

பால் உப பொருட்களுக்கான விலை உயர்வானது புதன் கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே