நீட் தேர்வு ஆள்மாறாட்டம் – கேரளாவில் இடைத்தரகர் கைது

மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நபர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆள் மாறாட்டத்திற்கு கேரளாவைச் சேர்ந்த தரகர் ஒருவர் ஏற்பாடு செய்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து அந்த தரகரை பிடிக்க 2 தனிப்படை போலீசார் கேரளாவுக்கு நேற்று விரைந்தனர். இந்நிலையில், கேரளாவில் திருவனந்தபுரத்தில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வந்த ஜோசஃப் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த நபர் இன்று தேனி கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. பிடிபட்டுள்ள தரகர் மூலமாக மேலும் பலர் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுவதால், விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்ய சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே