நீட் தேர்வு எழுதுவோருக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்காக தமிழகத்தில் 412 மையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைத்தது. அந்த மையங்களில் காலாண்டுத் தேர்வு விடுமுறையின் போது நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுவது வழக்கம்.
அதன்படி நாளை முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த Etoos India நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், அரசு ஆசிரியர்களைக் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. நாளை முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பின்னர் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடக்கும்.
காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரையிலும், பிற்பகலில், 1.10 மணி முதல் 4.20 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, முந்தைய நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜே.இ.இ. பயிற்சி வழங்குவதற்கு ஏதுவாக, மாவட்டத்துக்கு 10 ஆசிரியர்கள் வீதம் 32 மாவட்டங்களில் 320 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 6 மற்றும் 7ஆம் தேதிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.