நீட் ஆள்மாறாட்டம்: மேலும் 4 மாணவர்களிடம் விசாரணை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆள் மாறாட்டத்திற்கு உடந்தையாக கேரளாவைச் சேர்ந்த தனியார் நீட் பயிற்சி மையம் நடத்தி வரும் ஜார்ஜ் ஜோசப் என்பவர் இருந்ததாக தெரியவந்தது.

இதையடுத்து கேரளா விரைந்த தனிப்படை ஜார்ஜ் ஜோசபிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவரை விடுவித்த போலீசார், தேவைப்படும் போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கூறியுள்ளனர்.

இந்த நிலையில், மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் கொடுத்த வாக்குமூலத்தை வைத்தும், தரகராக செயல்பட்ட ஜோசப் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் மேலும் 4 பேர் ஆள்மாறாட்டம் மூலம் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

  • காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவி உட்பட 3 பேரும்,
  • தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவரும் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கியுள்ளனர்.

இந்த 4 பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ள சிபிசிஐடி தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மருத்துவ தேர்வு குழு, மேலும் 4 பேர் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக எந்த புகாரும் வரவில்லையென்றும், சிபிசிஐடி தரப்பில் இருந்தும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்ய சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி பணியில் இருந்து வெங்கடேசன் பணி இடை நீக்கம் செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே