நிரம்பும் மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு 80 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரிக் கரையோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

அதேபோன்று, கிருஷ்ணராஜ சாகர் அணையும் முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் 50 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நொடிக்கு 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலிலும் அதே அளவு நீர் பாய்வதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

மேட்டூர் அணைக்கு 80 ஆயிரம் கனவீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு நேற்று இரவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காவிரி கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்கள் மேட்டூர் அணை மற்றும் அதன் கரையோரப் பகுதிகளில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பற்ற முறையில் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, செல்ஃபி எடுப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே